ECONOMYHEALTHNATIONAL

தடுப்பூசி பெற்ற முதியோர் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்- நோர் ஹிஷாம் அறிவுறுத்து

ஷா ஆலம், ஏப் 29- கோவிட்-19 தடுப்பூசி பெற்ற முதியோர்  எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தரப்பினருக்கு நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

தடுப்பூசி பெற்றப் பின்னரும் வெளியில் செல்லும் போது முகக் கவசங்களை அணிவது, கூடல்  இடைவெளியைக் கடைபிடிப்பது  போன்ற விதிமுறைகளை மூத்த குடிமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அந்த தடுப்பூசி வீரியம் பெறும் என அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பெற்றப் பின்னரும் முதியோர்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக கூட்ட நெரிசல் உள்ள, குறுகலான பகுதிகளையும் பிறருடன் மிக அருகில் நின்று உரையாடுவதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்தளவையும் பெற்ற பிறகு 40 மருத்துவ பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளானதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அவர்களில் ஒன்பது பேர் இரண்டாவது தடுப்பூசி பெற்ற இரு வாரங்கள் கழித்தும் இதர 31 பேர் இரண்டு வாரங்களுக்கு குறைவான காலக்கட்டத்திலும் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கானதாக  நோர் ஹிஷாம் சொன்னார்.

தடுப்பூசி பெற்ற பின்னர் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு லேசான அறிகுறிகளே தென்பட்டதோடு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

கோவிட்-19 நோய் தொற்றால் உடலின் உள்ளே ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது. அதே சமயம், எஸ்.ஒ.பி. விதிமுறைகள் வெளியிலிருந்து வரக்கூடிய ஆபத்துகளை தடுக்கிறது என்று அவர் மேலும்  சொன்னார்.


Pengarang :