ECONOMYSELANGOR

சிலாங்கூரில் மே 8 ஆம் தேதி முதல் ரமலான் சந்தைகள் இல்லை

ஷா ஆலம், மே 6- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் வரும் 8 ஆம் தேதி தொடங்கி அனைத்து ரமலான் சந்தைகளும் மூடப் படுகின்றன.

அதே சமயம், நோன்புப் பெருநாள் சந்தைகளும் இரவுச் சந்தைகளும் கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்டு இரவு 10.00 மணி வரை  செயல்பட அனுமதிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வர்த்தக மையத்தின் பரப்பளவுகேற்ப வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். எண்கள் பிரகாரம் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கும் நடைமுறை அமல் செய்யப்படும். 12 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் வர்த்தக மையங்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் சொன்னார்.

இதர வகையான நிபந்தனைகளை சந்தை நிர்வாகத்தினர், ஊராட்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் தேவைக்கேற்ற வகையில் அவ்வப்போது நிர்ணயிப்பர் என்றும் அவர் கூறினார்.

நாளை தொடங்கி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொதுமக்கள் உணவருந்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் பொது முடக்க காலத்தில் அதிகாலை 6.00 மணி முதல்  நள்ளிரவு 12.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :