ECONOMYNATIONAL

நீண்ட கால பொது முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்- பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர் சங்கம் கவலை

கோலாலம்பூர், மே 20– பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்கு முடக்கி வைக்கும் செயல் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மலேசிய பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர் சங்கம் கூறுகிறது.

முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வதால் பல வர்த்தகங்கள் மூடப்படுவதற்கும் தொழிலாளர்கள் வேலை நீக்கம்  செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்து விடும் என அச்சங்கம் தெரிவித்தது.

ஆகவே, முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு பதிலாக கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அமல்படுத்தும்படி  நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என அச்சங்கம் கூறியது.

வேலையிடங்களில் தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றுவதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அச்சங்கத் தலைவர் டத்தோ லிம் கோக் பூன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலேசிய உற்பத்தியாளர் சங்கம் கடைபிடித்து வரும் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை இதற்கு உதாரணமாக கூறலாம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பதோடு தடுப்பூசிகளைப் பெறுவதற்கு தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :