PBTSELANGORSUKANKINI

சிலாங்கூர் இயங்கலை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க 30,000 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், மே 24– ‘சிலாங்கூர் எக்ஸ்டிவி வெர்சுவல் இ-ஸ்போர்ட்‘ எனப்படும் இயங்கலை வாயிலாக நடைபெறும் போட்டியில் பங்கேற்க இதுவரை 27,968 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்த போட்டி பப்ஜி, மோபைல் லெஜெண்ட் பேங் பேங், கால் ஆப் டியூட்டி மோபைல், புரோ இவோலுஷன் சோக்கர் 2021, பிபா புரோ கிளப் ஆகிய இணைய விளையாட்டுகளை உள்ளடக்கியுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் முதல் மே 5ஆம் தேதி வரை இப்போட்டிக்கு ஒட்டு மொத்தமாக 31,617 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் சொன்னார்.

இது தவிர்த்து, சிலாங்கூர் எக்ஸ்டிவி வெர்சுவல் மராத்தோன் போட்டிக்கு 3,009 விண்ணப்பங்களும் எக்ஸ்டிவி வெர்சுவல் செஸ் போட்டிக்கு 400 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன என்றார் அவர்.

இந்த அனைத்து விதமான இயங்கலை போட்டிகளுக்கும் வரும் டிசம்பர் மாதத்திற்குள்  450,000 விண்ணப்பங்கள் கிடைக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிகளுக்காக 411,680 வெள்ளி மதிப்புள்ள பரிசுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கடந்தாண்டு நடைபெற்ற இத்தகைய போட்டிகளில் 250,631 பேர் பங்கேற்றதோடு ஒரு கோடியே 80 லட்சம் பேர் சமூக ஊடகங்கள் வழி  இப்போட்டியை கண்டு களித்தனர்.


Pengarang :