HEALTHPBTSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களின் பங்கேற்பு தேவை- நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், மே 27– நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்ந்த தன்னார்வலர்கள் அதிகளவில் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கி வரும் கடும் பணிச்சுமையைக் குறைப்பதில் தன்னார்வலர்களின் பங்களிப்பை தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மருத்துவ அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகள், பல் மருத்துவ அதிகாரிகள், தாதியர், சுற்றுசூழல் சுகாதார அதிகாரிகள் மற்றும்  துணை அதிகாரிகள் ஆய்வுக மருத்துவ தொழில்நுட்பர்கள் ஆகியோரின் சேவை தங்களுக்கு மிகவும் தேவைப்படுதாக அவர் சொன்னார்.

தொண்டூழியராக சேர விரும்புவோர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் உடல் மற்றும் மனோ ரீதியில் ஆரோக்கியமானவராகவும் கர்ப்பணியாக இல்லாதவராகவும்  இருக்க வேண்டும் என்பதோடு தங்கள் முதலாளியின் அனுமதிக் கடிதத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் தேவைப்படும் இடத்தில் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதோடு கடந்த 14 நாட்களில் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாதவர்களாகவும் இருத்தல் அவசியம் என்றார் அவர்.

தொண்டூழியர்களுக்கு போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சம்பளம் அல்லது அலவன்சை சுகாதார அமைச்சு வழங்காது. பணியில் இருக்கும் போது உண்டாகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட தொண்டூழியர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :