ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

செட்டி பாடாங் விவகாரம்- வரலாற்று அடையாளத்தை  நிலை நிறுத்த வேண்டும்- ஆட்சிக்குழுவில் கணபதிராவ் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 3– கிள்ளான் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள செட்டி பாடாங் பெயர் மாற்றப்படும் விவகாரத்தை தாம்  மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு நேற்று கொண்டுச் சென்றதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த பெயர் மாற்றம் தொடர்பில் தாம் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட ஆட்சிக்குழு, கிள்ளான் நகராண்மைக் கழகத்துடன் பேச்சு நடத்திய பின்னர் இவ்விவகாரத்திற்கு சுமூகமாக தீர்வு காணப்படும் எனக் உறுதியளித்துள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

செட்டி பாடாங் என அழைக்கப்பட்ட அந்த இடத்தில் தற்போது திடல் இல்லை என்பதால் செட்டி என்ற பெயரை நிலைநிறுத்தி பாடாங் என்ற சொல்லுக்கு பதிலாக டத்தாரான் என மாற்றம் செய்வதற்கு தாம் செய்த பரிந்துரையை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வரவேற்றதாக அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.‘

அந்த இடத்திற்கு ‘டத்தாதாரன் செட்டி‘ எனும் புதிய பெயரை நான் பரிந்துரைத்துளேன்.  எனினும், வரலாற்று நோக்கங்களுக்காக அதன் பழைய பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.

இவ்விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அனைத்து தரப்பினரும் பொறுமை காக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வரும்  வர்த்தக சமூகத்தினரான செட்டியார்களின் வரலாற்றை அடையாளப்படுத்தும் இடமாக அந்த செட்டி பாடாங் விளங்கி வருவதையும் கணபதிராவ் தமது  அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

இந்த இடத்தின் வரலாற்று மதிப்பை உணர்வுகளால் மட்டுமே அளவிட முடியுமே தவிர, பணத்தால் அல்ல என்றும் அவர் சொன்னார்.

இந்த செட்டி பாடாங்கின் பெயரை மாற்றுவதற்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் கடந்த காலங்களில் பல முறை மேற்கொண்ட முயற்சிகளையும் கணபதிராவ் பட்டியலிட்டார்.

2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் பாரிசான் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு தேசிய முன்னணி மற்றும் அம்னே தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில் இதே முயற்சி மறுபடியும் முன்னெடுக்கப்பட்டது. கோத்தா ஆலம் ஷா  சட்டமன்ற முறையில் நானும் கவுன்சிலர் யுகராஜாவும் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

மறுபடியும் இவ்வாண்டில் செட்டி பாடாங் பெயரை மாற்றுவதற்கு நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததோடு எனது கவனத்திற்கும் இவ்விவகாரம் கொண்டு வரப்படவில்லை. 

கிள்ளான் நகராண்மைக்கழக உறுப்பினர் டினேஷ் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் மூலம் இவ்விஷயம் குறித்து கடந்த வியாழக்கிழமை நான் அறிந்தேன். உடனடியாக மந்திரி புசாரை தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண்பதாக அவர் வாக்குறுதியளித்தார் என்று கணபதிராவ் சொன்னார்.


Pengarang :