ECONOMYHEALTHPBTSELANGOR

சபாக் பெர்ணம் பி.கே.பி.டி. பகுதியில் 3,900 பேரிடம் கோவிட்-19 சோதனை- 152 பேருக்கு நோய்த் தொற்று உறுதி

சபாக் பெர்ணம், ஜூன் 3– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட சபாக் பெர்ணம் வட்டாரத்தின் மூன்று குடியிருப்பு பகுதிகளிலும் வசிக்கும் 3,900 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் 152 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட வேளையில் மேலும் 150 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தாமான் பெர்த்தாமா, தாமான் செரெண்டா, தாமான் பிரிமா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நேற்று நான்காவது நாளாக கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவர்களில் 152 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த தொற்று மையத்தை உள்ளடக்கிய ஒரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ள வேளையில் மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என  அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள பேரிடர் நடவடிக்கை அறைக்கு வருகை புரிந்தப் பின்னர செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வருகையின் போது சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களை மந்திரி புசார் குடியிருப்பாளர்களிடம் வழங்கினார்.


Pengarang :