EKSKLUSIFMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எஸ்.பி.எம். தேர்வு மதிப்பெண் அளவீடு தேர்வு வாரியத்துடையது அல்ல- கல்வியமைச்சு விளக்கம்

ஷா ஆலம், ஜூன் 12- தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் தொடர்பான மதிப்பெண் அளவீடு மலேசிய தேர்வு வாரியத்திற்கு சொந்தமானது அல்ல என்று கல்வியமைச்சு தெளிவுபடுத்தியது.

அந்த அளவீடு ஏறக்குறைய 2020ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வின் மதிப்பெண்களை  பிரதிபலிக்கும் வகையில் உள்ளதோடு  பொதுமக்களுக்கு  குறிப்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

நாட்டில் தேர்வு மதிப்பீட்டு அமைப்பாக விளங்கும் மலேசிய தேர்வு வாரியத்தின் தோற்றத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை அமைந்துள்ளதோடு பொது அமைதிக்கு குந்தகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று என அது தெரிவித்தது.

இதன் தொடர்பில் நேற்று இரவு 10.31 மணியளவில் போலீசில் புகார் செய்யப்பட்டதோடு தொடர்பு பல்லூடக ஆணையத்தின் கவனத்திற்கும் இவ்விகாரம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கை குறிப்பிட்டது.

முன்னதாக, மாமாமியா மியா முகநூலில் எஸ்.பி.எம். தேர்வு அளவீட்டு அட்டவணை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போதுள்ள பிள்ளைகள் தொடர்ச்சியாக ‘ஏ‘ எடுப்பது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற வாசகத்தோடு பள்ளிகள் எப்போது அரசியலாக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.

கடந்தாண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்ட மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின்  மொத்தம் 9,411 மாணவர்கள் ‘ஏ‘ நிலையில் தேர்ச்சி பெற்றதாக கூறியிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 8,876 ஆக இருந்தது.


Pengarang :