ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

எஸ்.ஒ.பி. அமலாக்கம் தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள வாரண்ட் தேவையில்லை- அமைச்சர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூன் 25- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அமலாக்கம் தொடர்பான சோதனைகளை அமலாக்க அதிகாரிகள் வாரண்ட் இன்றி மேற்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட  2021 ஆண்டு அவசரகாலச் சட்டத்தில் (அத்தியாவசிய அதிகாரங்கள்) இதன் தொடர்பான ஷரத்து குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நாம் தற்போது அவசரகாலச் சட்டத்திற்கு உட்பட்டிருக்கிறோம். நிபந்தனையின் பேரில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் தொழிலியல் மையங்களில் நுழைந்து சோதனை மேற்கொள்ள நமக்கு அதிகாரம் உள்ளது என்றார் அவர்.

நேற்று பூச்சோங் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் இரு தொழிற்சாலைகளில் எஸ்.ஒ.பி. விதிமுறை அமலாக்கம் தொடர்பான சோதனையை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சோதனை மேற்கொள்ளும் போது அதற்கான அதிகாரத்துவ கடிதம் அல்லது வாரண்டை காட்டாத அமலாக்க அதிகாரிகளின் செயல் குறித்து மலேசிய எஸ்.எம்.இ. சங்கத்தின் துணைத் தலைவர் சின் சீ சியோ கேள்வியெழுப்பியிருந்தது தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :