ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

பாராஒலிம்பிக் போட்டி- பளு தூக்கும் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்

தோக்கியோ, ஆக 28 இங்கு நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் பளு தூக்கும் பிரிவில் போன்னி புன்யாவ் குஸ்டின் நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

சரவா மாநிலத்தின் செரியான் பகுதியைச் சேர்ந்த போன்னி நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்ததோடு இப்பிரிவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் 227 கிலோ எடையை தூக்கியதன்  மூலம் ஈராக் வீரர் ரசூல் மோஷின் பெற்ற சாதனையை இவர் முறியடித்துள்ளார். இப்போட்டியின் முதல் நாளன்று மூன்றாவது முறையாக மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக 228 கிலோ எடையை தூக்கி அவர் சாதனைப் படைத்தார்.

எனினும், கடந்த ஜூன் மாதம் துபாயில் நடைபெற்ற உலக கிண்ண பளு  தூக்கும் போட்டியில் 230 கிலோ எடையைத்  . தூக்கியதன் மூலம் பெற்ற உலக சாதனையை பென்னியால் முறியடிக்க முடியவில்லை. நான்காவது முயற்சியாக 231 கிலோ எடையை தூக்க அவர் முயன்றார். எனினும் அந்த முயற்சியில் அவர் தோல்வி கண்டார்.

இப்போட்டியில் வெள்ளிப்  பதக்கத்தை எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது ஆத்தியாவும் வெண்கலப்பதக்கத்தை பிரிட்டனைச் சேர்ந்த மிக்கி யாலும் பெற்றனர்.

 


Pengarang :