ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சுல்தான் உத்தரவுக்கேற்ப மக்களுக்கான உதவிகளைத் தொடர சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி

ரவாங், செப் 2- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை அறிந்து அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உத்தரவை ஏற்று செயல்பட சட்ட மன்ற உறுப்பினர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

உதவி தேவைப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை அடையாளம் காணும் பணியில் கிராமத் தலைவர்கள் உள்பட 50 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பலர் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளதை கருத்தில் கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட பிறகும் இத்தகைய உதவிகள் தொடரப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 7,000 முதல் 8,000 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோ தக் சீ தெரிவித்தார்.

பொதுமக்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளதால் அத்தேவைகளைக் கண்டறிவதற்காக தாங்கள் இனி வீடு வீடாகச் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே சமயம், வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கும் நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மூத்த குடிமக்கள் உள்பட வசதி குறைந்த தரப்பினருக்கு சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.

மூத்த குடிமக்களில் பலர் சொந்தமாக சமைக்க இயலாத நிலையில் உள்ளனர். இத்தகைய தரப்பினர் பற்றிய தகவல்கள் எங்கள் தொகுதி சேவை மையத்திடம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் நாங்கள் அவர்களுக்கான உணவை கடைகளில் ஆர்டர் செய்வோம். சம்பந்தப்பட்டவர்கள் அங்கு சென்று உணவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் களத்தில் இறங்கி சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடந்த மாதம் 23 ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :