ANTARABANGSAECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

12 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி- அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை

புத்ரா ஜெயா, செப் 2– பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி மலேசியாவிலும் இதர பகுதிகளிலும் இதுவரை வழங்கப்படவில்லை. இவ்விவகாரம் மீது எஃப்.டி.ஏ. எனப்படும் மருந்து மற்றும் உணவு நிர்வாக அமைப்பு, தேசிய சுகாதார கட்டுப்பாட்டு அமலாக்கத் தரப்பு போன்றவை இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் தரவுகள் நமக்கு கிடைக்கும் பட்சத்தில் அத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு  ஏதுவாக இவ்விவகாரத்தை தடுப்பூசி செயல்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்வோம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் ஆகக்கடைசி நிலவரங்கள் தொடர்பில் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறார்களுக்காக பிரத்தியேகமாக தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் பைசர் பயோஎன்டேக் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு வழங்கப்படுவதைக் காட்டிலும் மாறுபட்ட மருந்தளவைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இன்னும் அனுமதி கிடைக்காத காரணத்தால், பள்ளிகளில் உள்ள பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.


Pengarang :