Presiden Parti Keadilan Rakyat (KEADILAN) Datuk Seri Anwar Ibrahim pada sidang media pada 23 September 2020. Foto BERNAMA
ECONOMYMEDIA STATEMENT

4,500 கோடி வெள்ளி நிதியுதவி திட்டத்தை விரைந்து அமல் படுத்த பக்கத்தான் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, செப் 17-  கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காலத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோரின் சிரமத்தை குறைக்கும் வகையில் 4,500 கோடி வெள்ளி நிதியுதவி திட்டத்தை விரைந்து அமல் படுத்தும்படி அரசாங்கத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இந்த உதவித் தொகை திட்ட அமலாக்கத்தை தாங்கள் கடந்த வாரம் அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட  உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்களுக்கு வழங்கப்படும் பணம் வங்கிக் கடனுக்கு வட்டி கட்டுவதற்கே செலவழிந்து போகும் சூழல் ஏற்படுவதை தவிர்க்க அரசாங்கம் நிதியுதவி வழங்கும் போது கூடவே மோரோட்டோரியம் எனப்படும் கடனை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்திற்கு விதிக்கப்படும் வட்டியும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கெஅடிலான் தலைமையகத்தில் இன்று ஜெலாஜா பெடுலி நாடி ராக்யாட் திட்டத்தின் வாகன அணியை வழியனுப்பும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அவர்களுக்கு தொடர்ந்து உதவிக் கரம் நீட்டுமாறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அரசாங்க மானியத்தை செலவிடும் அதேவேளையில் தங்கள் சொந்த பணத்தையும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். இதனை நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.

Pengarang :