ECONOMYHEALTHPENDIDIKANSELANGOR

வியாழன் முதல் 156 தடுப்பூசி  மையங்களில் முன்பதிவின்றி தடுப்பூசி பெற இளையோருக்கு வாய்ப்பு

ஷா ஆலம், செப் 21- இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்-ரெமாஜா) வருகைக்கான முன்பதிவின்றி தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பினை பதின்ம வயதினர் வரும் வியாழக்கிழமை தொடங்கி நாடு முழுவதும் உள்ள 156 தடுப்பூசி மையங்களில் பெறுவர்.

பள்ளி செல்லாதோர் உள்பட அனைத்து தரப்பு இளையோரையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பள்ளி செல்லாதவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெறலாம். உயர்கல்விக் கூடங்களில் பயிலும் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் இன்னும் செயல்பாட்டில் இருக்கும் தடுப்பூசி மையங்கள் வாயிலாக தடுப்பூசி பெறலாம் என அது கூறியது.

தடுப்பூசி மையங்களில் கூட்ட  நெரிசலை தவிர்க்க பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட இளையோருடன் தடுப்பூசி மையம் வருவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சு தெரிவித்து.

தற்போது செயல்பட்டு வரும் தடுப்பூசி மையங்கள் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று கூறியிருந்தார்.

பன்னிரண்டு முதல் பதினேழு வயது வரையிலான 32 லட்சம் இளையோரை இலக்காக கொண்டு இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக கைரி தெரிவித்தார்.

இந்த பிக் ரெமாஜா திட்டத்தின் கீழ் இம்மாதம் 20 ஆம் தேதி வரை 308,186 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியி கடுமையான பக்கவிளைவுகள் குறித்து இதுவரை புகார்கள் பெறப்படவில்லை.


Pengarang :