ACTIVITIES AND ADSPBTWANITA & KEBAJIKAN

கம்போங் பாடாங் ஜாவா குடியிருப்பாளர்கள் முயற்சியில்  வெ.10,000 செலவில் உதவித் திட்டங்கள்

ஷா ஆலம், செப் 25- கோவிட்-19 நோய்த் தொற்றை முறியடிப்பதிலும் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர் கம்போங் பாடாங் ஜாவா குடியிருப்பாளர்கள்.

கடந்தாண்டு தொடக்கத்தில் நோய்த் தொற்று பரவியது முதல் சமூக நலத் திட்டங்களை மேற்கொள்வதிலும் நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவதிலும் கிராம மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டதாக கிராம சமூக மன்றத்தின் நிர்வாக மன்றத் தலைவர் ஃபாட்சிலா ஹஷிம் இஸ்மாயில் கூறினார்.

அரசாங்கம் வழங்கிய மானியம் மற்றும்  சொந்தமாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவது, குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவதற்காக பத்தாயிரம் வெள்ளி வரை செலவிட்டுள்ளோம் என்றார் அவர்.

இக்கட்டான சூழலில் ஒருவர் நிலையை மற்றொருவர் நன்கு அறிந்து வைத்திருந்தோம். சிரத்தை எதிர்நோக்குவோருக்கு உதவிகள் விரைந்து வழங்கப்படுவதை உறுதி செய்து வந்தோம் என்று அவர்  சொன்னார்.

கிராம மக்கள் தடுப்பூசி பெறுவதை குறிப்பாக சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்வதை உறுதி செய்வதில் கிராம சமூக மன்றம் தீவிர பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் கிராமம் ஒரு கட்டத்தில் மிக அதிகமாக அதாவது 70 கோவிட்-19 சம்பவங்களை வரை பதிவு செய்தது. இதன் காரணமாகவே அந்நிய நாட்டினர் உள்பட அனைவரும் தடுப்பூசி பெறுவதை  உறுதி செய்தோம் என்றார் அவர்.


Pengarang :