ECONOMYSELANGOR

செல்டேக் திட்டத்தில 1,100 தொழில்முனைவோர் பங்கேற்பு

ஷா ஆலம், அக் 20- இவ்வாண்டு ஜூன் 20 முதல் அக்டோபர்  15 வரையிலான காலக்கட்டத்தில் செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் விநியோக ஒருங்கமைப்புத் திட்டத்தில் 1,100 சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உற்சாகமூட்டும் வகையில் உள்ளதாக செல்டேக்  வர்த்தக மேம்பாட்டு தலைமை நிர்வாகி நோர் அஜிசா அப்துல்லா கூறினார்.

இத்திட்டத்திற்கு தொழில் முனைவோரிடமிருந்து குறிப்பாக நகர்ப்புறங்களிலிருந்து தினசரி விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளதாக அவர் சொன்னார்.

லைன் கிளியர் எக்ஸ்பிரஸ், லோஜிடிக்கா, போஸ் லாஜூ போன்ற பொருள் பட்டுவாடா நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒத்துழைப்பின் வாயிலாக இந்த வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. நாங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் பொருள்களை பட்டுவாடா செய்வதால் பலர் எங்களின் சேவையை நாடுகின்றனர் என்றார் அவர்.

கூடிய விரைவில் பாசார் லோக்கல் நிறுவனத்துடன் இணைந்து ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு தளவாடங்களை விநியோகிக்கும் பணியில் செல்டேக் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :