செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 10,000 இளையோருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு 

கிள்ளான், அக் 24- சிலாங்கூர் அரசின் இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் குறைந்தது 10,000 பதின்ம வயதினருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹாட் தாபிஷ் சமயப்பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வியைத் தொடராதவர்கள் உள்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் இத்திட்டத்திற்க இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோய்த் எதிர்ப்பாற்றல்  கொண்ட குழுமத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்துவது மற்றும் தடுப்பூசி பெறத் தவறியவர்களுக்கும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பளிப்பளிப்பது ஆகிய நடவடிக்கைகளில்  இளையோருக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு உதவும் நோக்கில் மாநில இந்த தடுப்பூசித் திட்டத்தை தொடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் இதற்கு அபரிமித ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலை நீடித்தால் குறைந்தது பத்தாயிரம் இளையோருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

மத்திய அரசின் பிக் ரொமாஜா தடுப்பூசித் திட்டத்தில் முன்பதிவு கிடைக்காத இளையோரை இத்திட்டத்தில் நாங்கள் இலக்காக   கொண்டுள்ளோம். என்று அவர் மேலும் சொன்னார்.

பண்டமாரான் ஜெயா, எம்.பி.கே. மண்டபத்தில் இன்று நடைபெற்ற இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் இன்று  கோலக் கிள்ளான் தொகுதியில் தொடங்கப்பட்ட வேளையில்  இத்திட்டம் விரைவில் பண்டமாரான், புக்கிட் லஞ்சான், தஞ்சோங் சிப்பாட் ஆகிய தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மாநிலத்திலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை இலக்காக கொண்ட  பதின்ம வயதினருக்கான செல்வேக்ஸ் திட்டத்திற்காக 150,000 டோஸ் தடுப்பூசிகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாகவும் இத்திட்டதை மேற்கொள்ள சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமிருடின் கடந்த 7 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :