ACTIVITIES AND ADSPBT

இந்திய சமூகத் தலைவரை அறிவோம் புக்கிட் லஞ்சான் தொகுதியில் அரும்பணியாற்றும் லோகநாதன்

ஷா ஆலம், அக் –அடிமட்ட மக்களுக்கும் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையே தொடர்புப் பாலமாக இருப்பவர்கள் இந்திய சமூகத் தலைவர்கள். 

எளிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய தீர்வினைக் காணும் பொறுப்புமிக்க பணியை இவர்கள் ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தாம் சார்ந்துள்ள தொகுதியில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் எண்ணிலடங்காப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் புக்கிட் லஞ்சான்தொகுதிக்கான இந்திய சமூத் தலைவர் தே. லோகநாதன்.

கடந்த மூன்று தவணைகளாக இந்திய சமூகத் தலைவராக இருந்து வரும் இவர், பி.கே.ஆர். டாமன்சாரா தொகுதியின் நிர்வாகக் குழு  உறுப்பினராகவும் பொறுப்பு  வகிக்கிறார்.

புக்கிட் லஞ்சான் தொகுயில் உள்ள வாக்காளர்களில் சுமார் 10 விழுக்காட்டினராக இருக்கும் இந்தியர்கள் மத்தியில் அடையாளப் பத்திரம் இல்லாமை, ஏழ்மை, சமூகப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில்  நமது சமூகம் சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டொழுங்குப் பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய தீர்வு காண்பதற்கான முயற்சிளை மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.

வறிய நிலையில் உள்ளவர்களுக்கு ஐ.பி.ஆர். எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் சென்று சேர்வதை உறுதி செய்து வருகிறேன்.

கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னையர் திட்டம், பெடுலி  சேஹாட் எனப்படும் சுகாதார பரிவுத் திட்டம், இலவச நீர் விநியோகத் திட்டம், உணவுக் கூடைத் திட்டம் போன்றவற்றின் வாயிலாக இப்பகுதிகள் மக்கள் பயன்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

இது தவிர, சமூகத் தலைவருக்கு ஒதுக்கப்படும் 10,000 வெள்ளி வருடாந்திர மானியத்தைக் கொண்டு சமையல் வகுப்பு, ஹிஜ்ரா வர்த்தக கடனுதவித் திட்ட விளக்கக் கூட்டம், இலவச குடிநீர் சலுகை  விளக்கக் கூட்டம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை தாம் மேற்கொண்டுளளதாக குறிப்பிட்டார்.

இதன் வாயிலாக 20 பேருக்கு ஹிஜ்ரா வர்த்தக கடனுதவி கிடைப்பதற்கும் 115 பேர் இலவச குடிநீர் திட்டத்தின் வழி பயன்பெறுவதற்கு  வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.

மேலும், கடந்த மே மாதம் 56 குடும்பங்களுக்கும் செப்டம்பர் மாதம் மேலும் 50 குடும்பங்களுக்கும் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், மாநில அரசாங்கத்தின் உதவிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் மூலம் பெறப்பதாகவும்,  கிடைத்த 50 உணவுக் கூடைகள் பெருநாள் காலத்தின் போது வசதி குறைந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன என்றார்.

சித்தம் எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக  நடைபெற்ற மருதாணி இடும் பயிற்சியில் இத்தொகுதியைச் சேர்ந்த 78 பேர் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :