ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருப்பீர்- பொதுமக்களுக்கு நினைவுறுத்து

ஷா ஆலம், டிச 4- அச்சமூட்டும் வகையைச் சேர்ந்த (வி.ஒ.சி.) புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்றான ஒமிக்ரோன் மலேசியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற நிலையான வழிகாட்டு  நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி. பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடித்து வரவேண்டும் என்று பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

ஒமிக்ரோன் தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது நமக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது டெல்டா வகை தொற்றை விட மோசமானதாக இருக்குமா என்பதும் நமக்கு தெரியாது. ஆகவே பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் போது கட்டொழுங்கை கடைபிடிப்பது அவசியமாகும் என்றார் அவர்.

எனினும், மாநில சுகாதாரத் துறை இவ்விவகாரத்தில் அலட்சியப் போக்கை கடைபிடிக்காமல் தீவிமாக செயல்படும் என நம்புகிறோம் என்று நேற்று இங்கு சிலாங்கூர் மாநில நிலையிலான அனைத்துலக மாற்றுத் திறனாளிளகள் தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஈப்போவிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடம் ஒன்றில் பயிலும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் முதலாவது நோய்த் தொற்று சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :