ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் கூ வீடுகள் அனுமதியின்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்படவில்லை

ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் அனுமதியின்றி எந்த சிலாங்கூர் கூ வீடும் அதன் உரிமையாளரால் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்படவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் வரை சம்பந்தப்பட்ட வீடு அதன் உரிமையாளர் வசம் இருக்க வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் சொத்துடைமை மேம்பாட்டு வாரியம் நிபந்தனை விதித்துள்ளது என்று  வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். 

 எந்த சிலாங்கூர் கூ வீடும் அனுமதி மற்றும் ஒப்புதல் இல்லாமல் அதன் முதல் உரிமையாளரால் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்படவில்லை என்பதை அந்த வாரியத்தின் 2021 அகடோபர் வரையிலான தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

முறையான விண்ணப்பத்தின் வாயிலாக மட்டுமே வீடுகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 சிலாங்கூரில் தகுதியுள்ள தரப்பினர் மட்டுமே  விலை கட்டுப்படுத்தப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதை உறுதிசெய்வதற்காகவும்விலை ஊக நடவடிக்கைகள் மற்றும்
வருமானம் ஈட்ட முயலும் தரப்பினரின் முயற்சிகளைத் தவிர்க்கவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என்று  அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று முறையான அனுமதியின்றி  உரிமையாளர்களால் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்ட  சிலாங்கூர் கூ வீடுகளின் எண்ணிக்கை குறித்து பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் சீ எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறைந்த விலை  வீடுகள் உள்ளிட்ட சிலாங்கூர் கூ வீடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும்  பிரிவினருக்கு மட்டுமே சொந்தமாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்திற்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Pengarang :