ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பக்தர்களின் வசதிக்காக தைப்பூச எஸ்.ஒ.பி. விதிகளை மறுஆய்வு செய்வீர்- குணராஜ் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 15– தைப்பூசத்திற்கான சீராக செயலாக்க நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) மறு ஆய்வு செய்யும்படி அரசாங்கத்தை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

அந்தந்த ஆலயங்களின் இடவசதிக்கேற்ப பக்தர்களின் எண்ணிக்கையும் இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவதஸ்தானத்தில் தைப்பூசத்தின் போது தினசரி 6,000 பக்தர்கள் மட்டுமே  அனுமதிக்கப்படுவர் என்ற கட்டுப்பாடு அந்த ஆலய வளாகத்தின் பரப்பளவைப் பொறுத்த வரை நியமாயமாற்றது என்று அவர்  கூறினார்.

மற்ற ஆலயங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்  என்பதோடு ஆலயத்தின் பரப்பளவு மற்றும் எஸ்.ஒ.பி. விதி பின்பற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் இவ்விவகாரத்தை மறு  பரிசீலனை செய்வார் என்பதோடு இந்துக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலான முடிவையும் எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பெரும் செலவில் பொருள்களை வாங்கி வியாபாரத்திற்கு தயாராகியுள்ள சிறு வணிகர்களை கடுமையான அமலாக்க கட்டுப்பாடுகளுடன் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்  ஊராட்சி மன்றங்களை கேட்டுக் கொண்டார்.

ஆலய வளாகங்களில் தற்காலிக கடைகளை அமைப்பதற்கு அனுமதிப்பதில்லை என்று அமலாக்கத் தரப்பினர் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு வியாபாரத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ள சிறு வணிகர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும் என்றும் அவர் வருணித்தார்.

கடந்த ஈராண்டுகளாக அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இத்தகைய சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். 

இது போன்ற வருடாந்திர திருவிழாக்கள்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து அவர்கள் ஓரளவு மீள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. கடந்த ஈராண்டுகளாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் எஸ்.ஒ.பி. விதிகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :