ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்துமலையில் பக்தர்கள் எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றி கட்டொழுங்குடன் நடந்து கொண்டனர்- கணபதிராவ்

ஷா ஆலம், ஜன 19- தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் கூடிய பக்தர்கள் எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றி கட்டொழுங்குடன் நடந்து கொண்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

பக்தர்கள் மத்தியில் எஸ்.ஒ.பி. விதிமீறல்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய காவல் துறையினர், அமலாக்கப் பிரிவினர் மற்றும் தன்னார்வலர்கள் நேற்று காலை முதல் தேவஸ்தானத்தில் பணியில் ஈடுபட்டதாக அவர் சொன்னார்.

பொதுவில், தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ளதை எஸ்.ஒ.பி. விதிகளை பக்தர்கள் முறையாகப் பின்பற்றி நடந்தனர். கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் அவர்கள் முகக் கவசம் அணிவது, கூடல் இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் உடல் உஷ்ணத்தை சோதிப்பது போன்ற எஸ்.ஒ.பி. விதிகளை தவறாது கடைபிடிப்பதைக் காண முடிந்தது என்றார் அவர்.

இவ்வாண்டு தைப்பூச விழா அவ்வளவாக சோபிக்கவில்லை. இருந்த போதிலும் இறைவனுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்துவதுதான் நமது தலையாய கடமையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் மற்றும் மனித  வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருடன் பத்துமலையில் தைப்பூச நிலவரங்களை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆலய வளாகத்தின் உட்புறத்திலும் வெளியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்வதை காண முடியவில்லை. பொதுமக்கள் ஒன்று கூடக்கூடிய அல்லது அவர்களின் கவனத்தை ஈர்க்க க்கூடிய வியாபாரம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்றார் அவர்.

இதனிடையே, சுமார் 200,000 வெள்ளி செலவில் 4,000 உணவுக் கூடைகள் இந்துக்களுக்கு வழங்கப்படும் தகவலையும் கணபதிராவ் வெளியிட்டார்.

கடந்த மாதம் மத்தியில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு  இந்த உணவுக் கூடை வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறிய அவர், இந்திய சமூகத் தலைவர்கள் மூலம் இப்பொருள்களை பகிர்ந்தளிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.


Pengarang :