ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

டோல் கட்டண விவகாரம்- தேர்வு செய்யும் உரிமை பயனீட்டாளர்களுக்கு தரப்பட வேண்டும்- பிரதமர்

புத்ரா ஜெயா, ஜன 20- நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை செலுத்தும் முறை தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை வாகனமோட்டிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆர்.எப்.ஐ.டி. எனப்படும் வானொலி அலைவரிசை அடையாள முறை, டச் அண்ட் கோ அல்லது ஸ்மார்ட்டெக் ஆகியவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பயன்படுத்தி டோல் கட்டணத்தை செலுத்த வாகனமோட்டிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

டச் அண்ட் கோ முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் ரொக்கமாகவும் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதைப் போல் இப்போதும் வாகனமோட்டிகளுக்கு கட்டண முறையை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

விரைவான பயணத்தை உறுதி செய்வதற்காக அமலாக்கப்பட்ட ஆர்.எப்.ஐ.டி முறை ஒரு நல்ல பரிந்துரைதான். எனினும் இந்த ஆர்.எப்.ஐ.டி. ஒரு முன்னோடித் திட்டமாக உள்ளதால் அதனை மக்கள் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, அவர்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்தித் தருவது அவசியம் என்றார் அவர்.

டோல் சாவடிகளில் ஸ்மார்ட்டெக் மற்றும் டச் அண்ட் கோ தடங்களை நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பத்து தடங்கள் இருந்தால் அனைத்திலும் ஆர்.எப்.ஐ.டி. திட்டத்தை அமல்படுத்தி விடாதீர்கள். ஆர்.எப்.ஐ.டி. முறைக்கு சில தடங்களையும் டச் அண்ட்  கோ மற்றும் ஸ்மாட்டெக் முறைக்கு சில தடங்களையும் ஒதுக்குங்கள். வாகனமோட்டிகளுக்கு நெருக்கடி தர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :