ECONOMYPENDIDIKAN

செமினியிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடத்தில் 33 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது 

கோலாலம்பூர்,  மார்ச் 10– முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் என சந்தேகிக்கப்படும் 33 அந்நிய நாட்டினரை குடிநுழைவுத் துறையினர் செமினியிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடத்தில் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

துப்புரவு பணியாளர்களுக்காகவும் தோட்டக்காரர்களாகவும் வேலை செய்து வந்த 27 இந்தோனேசியர்கள், 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு வங்காளதேசி ஆகியோர் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைய்மி டாவுட் கூறினார்.

இருபத்திரண்டு முதல் 67 வயது வரையிலான அந்த அந்நிய நாட்டினர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 7.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலை செய்து வந்தது தாங்கள் மேற்கொண்ட உளவு நடவடிக்கையில் தெரிய வந்தது என் அவர் சொன்னார்.

கடந்த ஈராண்டுகளாக அங்கு வேலை செய்து வரும் அவர்களிடம் தற்காலிக வேலை அனுமதி அட்டை அல்லது இதர அடையாளம் ஆவணங்கள் இல்லை என்பது தொடக்க க் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த அந்நிய நாட்டினர் தற்காலிக வேலை அனுமதி அட்டைக்காக இதுவரை விண்ணப்பம் செய்ததில்லை. அவர்களின் உண்மையான முதலாளியைக் கண்டறிவதற்காக நிறுவன நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஏழு சம்மன்கள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது பலர் அருகிலுள்ள குன்றின் மேல் ஏறி தப்ப முயன்றனர்.  சிலர் தாங்கள் அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக சீருடைகளை களைந்து சாதாரண உடையில் இருந்தனர். மேலும் சிலர் சிறிய அறைகளில் ஒளிந்து கொண்டிருந்தனர். எனினும் குடிநுழைவுத் துறை அதிகாரிகளின்  துரித நடவடிக்கையால் அவர்களின் தப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்


Pengarang :