ECONOMYSELANGORTOURISM

26 சுற்றுலாத் துறையினருக்கு 480,000 வெள்ளி நிதியுதவி- டூரிசம் சிலாங்கூர் தகவல்

ஷா ஆலம், ஏப் 23- கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையினரிடமிருந்து நிதியுதவி கோரி 64 விண்ணப்பங்களை டூரிசம் சிலாங்கூர் பெற்றது.

இவ்வாண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வரை 480,000 வெள்ளியை உள்ளடக்கிய 26 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனம் கூறியது.

கடந்தாண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் இவ்வாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சுற்றுலாத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்து  இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.

சிலாங்கூர் மாநில சுற்றுலா சங்கம், புறநகர் தங்குமிட விடுதி நடத்துநர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டத் தரப்பினர் சிறப்பு மானிய திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருந்ததாக அது தெரிவித்தது.

நாடு எண்டமிக் கட்ட நகர்வில் உள்ள நிலையில் சுற்றுலாத் துறையை மீட்சிபெறச் செய்வதற்காக அத்துறை சார்ந்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியத் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்யும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கூடின பட்சம் 20,000 வெள்ளி வரை மானியம் வழங்கப்படுகிறது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :