ECONOMYHEALTHSELANGOR

பண்டமாரான் தொகுதியில் இலவச மருத்துவ முகாம்- 2,000 பேர் பயன் பெறுவர்

ஷா ஆலம், மே 18– சிலாங்கூர் சாரிங் எனப்படும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் கீழ் பண்டமாரான் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் வரும் ஜூலை மாதம் 23 ஆம் தேதி பண்டமாரான் விளையாட்டு மையத்தில் நடைபெறும் என்று பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக பங்சாபுரி பண்டமாரான், பங்சாபுரி பூங்கா ராயா, பங்சாபுரி தாமான் சீ லியோங், பங்சாபுரி ஸ்ரீ அங்காசா, பங்சாபுரி ஸ்ரீபாயு ஆகிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் பயனடைவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இந்த மருத்துவத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால் அவர்களின் பெயர்ப் பட்டியல் எங்களிடம் உள்ளது. கோலக் கிள்ளான் தொகுதியுடன் சேர்ந்து ஏககாலத்தில் நடத்தப்படும் இந்த முகாமில் பி40 தரப்பினர் தவிர்த்து மற்றவர்களும் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.

உடலாரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே சோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்பதால் கிராமத் தலைவர்கள் வாயிலாகவும் வீடு வீடாகச் சென்றும் மக்களைச் சந்தித்து இத்திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கவிருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டமாரான் தொகுதியில் மருத்துவ முகாமில் பங்கேற்பதற்கான வாய்ப்பை தவறவிட்டவர்கள் மற்றும் கோட்டா முடிந்த காரணத்தால் வாய்ப்பை இழந்தவர்கள் அருகிலுள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் குளுகோமா உள்ளிட்ட நோய்கள் மீதான சோதனைகளை மையமாக கொண்டு சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மாநில அரசு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :