ECONOMYSELANGOR

ஜாலான் செமினி 1, தேசிய பள்ளியின் கணினி அறையை சீரமைக்க எம்.பி.ஐ. உதவி

ஷா ஆலம், மே 31- ஜாலான் செமினி 1, தேசிய பள்ளியின் கணினி அறையை சீரமைக்கும் பணிகளுக்காக மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் (எம்.பி.ஐ.) 10,000 வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளது.

நேற்று அப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக் கூட்டத்தின் போது இந்த நிதிக்கான மாதிரி காசோலை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக எம்.பி.ஐ. சமூகக் கடப்பாட்டு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

அடிப்படை வசதிகள் பிரச்னை காரணமாக அந்த கணினி அறை நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமலிருப்பதாக தம்மிடம்  தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதன் பின்னர் மாணவர்கள் அந்த கணினி அறையை முழுமையாகப் பயன்படுத்த முடியும். மக்களிடமிருந்து பெறப்பட்ட வருமானம் மக்களுக்கு செலவிடப்படுகிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

பள்ளி நிர்வாகத்திடமிருந்து இதற்கான விண்ணப்பம் கிடைத்த இரு வார காலத்தில் இந்த உதவித் தொகை அவர்களிடம் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பத்து லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் பள்ளிகள் மற்றும் மாணவர்களை உட்படுத்திய நலத் திட்டங்களை எம்.பி.ஐ. இவ்வாண்டில் முதன் முறையாக முன்னெடுத்துள்ளது.

இந்த நிதியில் ஐந்து லட்சம் வெள்ளி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேலும் ஐந்து லட்சம் வெள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.


Pengarang :