ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெ.1,700 கள்ள நோட்டு கொடுத்து கைப்பேசி வாங்கியப் பெண்- ஆடவர் போலீசில் புகார்

கோலாலம்பூர், செப் 28- கைப்பேசியை வாங்கியதற்காக பெண்மணி ஒருவர் வழங்கிய 1,700 வெள்ளி ரொக்கப் பணம் கள்ள நோட்டு என்பதை அறிந்து ஆடவர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

அந்த  17 நூறு வெள்ளி நோட்டுகளை வங்கி ஒன்றின் சேமிப்பு கணக்கில் வைக்க முயன்ற போது தாம் ஏமாற்றப்பட்டதை அந்த ஆடவர் உணர்ந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைட் ஹசான் கூறினார்.

இச்சம்பவம் இம்மாதம் 20 ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறிய அவர், அவ்வாடரின் வசமிருந்து கைபேசியை 1,950 வெள்ளிக்கு வாங்க பெண்மணி ஒருவர் ஒப்புக் கொண்டதாகச் சொன்னார்.

பண்டார் டெக்னோலோஜி காஜாங்கில் உள்ள பில்லியன் பேரங்காடிக்கு ஒரு ஆடவருடன் சாக்லேட் நிற கியா செரோட்டோ ரகக் காரில் அப்பெண் வந்துள்ளார். அந்தப் பெண் 17 நூறு வெள்ளி நோட்டுகளையும் ஐந்து 50 வெள்ளி நோட்டுகளையும் அந்த ஆடவரிடம் ஒப்படைத்து விட்டு கைபேசியைப் பெற்றுச் சென்றுள்ளார் என்றார் அவர்.

பின்னர் அந்த ஆடவர் அந்த பணத்தை சி.டி.எம். எனப்படும் ரொக்கத் தொகை வைப்பு இயந்திரத்தின் மூலம் தனது வங்கிக் கணக்கில் சேர்க்க முயன்றுள்ளார்  எனினும், 100 வெள்ளி நோட்டுகளை அந்த இயந்திரம் ஏற்காததைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் அவர் போலீசில் புகார் செய்தார் என ஜைட் சொன்னார்.

இத்தகைய மோசடிக் கும்பல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், ரொக்க பரிவர்த்தனைகளை அவசர கதியில் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.


Pengarang :