ECONOMYSELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை தெங்கு அமீர் ஷா தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், அக் 6- சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை (சிப்ஸ் 2022) மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்திற்கு வருகை புரிந்த தெங்கு அமீர் ஷாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஆகியோர் வரவேற்றனர்.

மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிர்வாக செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக யு.எம்.டபள்யு. டெவலப்மெண்ட் சென்.பெர்ஹாட் மற்றும் லோங் (கூச்சிங்) சென் பெர்ஹாட் நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வையும்  ராஜா மூடா பார்வையிட்டார்.

சுற்றுச் சூழல் மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் தொடர்பில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கும் பெட்ரோனாஸ் குளோபல் டெக்னிக்கல் சொலுஷன்ஸ் நிறுவனத்திற்கிடையே ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வும் ராஜா மூடா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலாங்கூர் தொழில்துறை பூங்கா, சிலாங்கூர் விவேக நகர மற்றும் இலக்கவியல் பொருளாதாரம், ஆராய்ச்சி மேம்பாடு, இனோவாசி சிலாங்கூர் ஆகிய கண்காட்சிக் கூடங்களையும் அவர் பார்வையிட்டார்.

இந்த மாநாடு இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆறாவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் 623 உள்நாட்டு மற்றும் அனைத்துலக நிறுவனங்களை உள்ளடக்கிய 906 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Pengarang :