ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிங்கை பிரஜையை மிரட்டிய போக்குவரத்து போலீஸ்காரர் உடனடி பணியிட மாற்றம்

ஷா ஆலம், அக் 8- சிங்கை பிரஜையை மிரட்டியதாக கூறப்படும் போக்குவரத்து போலீஸ்காரர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த மிரட்டல் சம்பவம் கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் ஜோகூர் பாலம் அருகே உள்ள சாலையொன்றில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் மீது ஜிப்ஸ் எனப்படும் உயர்நெறி மற்றும் தரப் பின்பற்றல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய  ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஸமான் மாமாட், அந்த போலீஸ்காரர் பொதுமக்களை சம்பந்தப்படுத்தாத பணிக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகச் சொன்னார்.

இச்சம்பவம் மீது ஜிப்ஸ் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. போலீஸ் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய இத்தகைய சம்பவங்களை நாங்கள் கடுமையாக கருதுகிறோம் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

விசாரணை முடிவில் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டால் வேலை நீக்கம் வரையிலான கடும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு எதிராக எடுக்கப்படும் என்றார் அவர்.

சிவப்பு சமிக்ஞை விளக்கை இரு முறை மீறிய குற்றத்திற்காக ஜோகூர் பாருவில் தங்களைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் இக்குற்றத்திற்கு தண்டனையாக 500 வெள்ளியைச் செலுத்தும்படி கோரியதாக ஒரு தம்பதியரை மேற்கோள் காட்டி சிங்கப்பூரின் இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


Pengarang :