ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோப்கேர் திட்டத்தின் வழி 1,400 பேருக்கு வேலை வாய்ப்பு- கணபதிராவ் தகவல்

கிள்ளான், டிச 5-  சிலாங்கூர் வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் (ஜோப்கேர்) இவ்வாண்டில் சுமார் 1,400 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

இந்த ஜோப்கேர் பயணத் தொடருக்கு கிடைத்து வரும் ஊக்கமூட்டும் ஆதரவைக் கருத்தில் கொண்டு இதனை அடுத்தாண்டிலும் தொடர தாங்கள் திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டைப் போலவே அடுத்தாண்டிலும் வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு சிலாங்கூர் டானாசிஸ்வா வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக நிதி வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருந்தொற்று காரணமாக வேலை இழந்த குறைந்த, மத்திய மற்றும் உயர் தொழில் திறன் கொண்ட தரப்பினருக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் நோக்கில் மாநில அரசு இந்த ஜோப்கேர் திட்டத்தை தொடக்கியது.

சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இத்திட்டத்தில் 15 நிறுவனங்கள் பங்கு கொண்டு சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.


Pengarang :