SELANGORWANITA & KEBAJIKAN

பதினெட்டு மாதக் குழந்தையைக் கொன்றதாக இளம் தாய் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஜன 20- பதினெட்டு மாதக் குழந்தையை கொலை செய்ததாக
இளம் தாயான உமிஷஹிரா காலிட் (வயது 20) என்பருக்கு எதிராக
இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டாக செயல்பட்ட நீதிபதி அகமது புவாட்
ஓத்மான் முன்னிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட
போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவர் தலையை
அசைத்தார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க
வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது
என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு
செய்யப்படவில்லை.
இம்மாதம் 11ஆம் தேதி மாலை 5.52 மணிக்கும் 12ஆம் தேதி காலை 11.30
மணிக்கும் இடையே சைபர் ஜெயாவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்பு ஒன்றில் 18 மாதமே நிரம்பிய தனது சொந்த மகனுக்க மரணம்
விளைவித்ததாக தனியார் நிறுவனம் ஒன்றில் குமாஸ்தாவாக பணிபுரியும்
உமிஷஹிரா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுர் சபரினா ஜூபாய்ரி
இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில்
வழக்கறிஞர் ஜோஹான் ரட்ஸி ஆஜராகிறார்.
மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இந்த வழக்கை வரும்
மார்ச் 20ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Pengarang :