ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கடந்தாண்டு மலேசிய விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 5.27 கோடி பேராக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜன 27- நாட்டில் மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து கடந்த 2022ஆம் ஆண்டு கணிசமான அதிகரிப்பைக் கண்டது.

கடந்தாண்டில் பயணிகள் எண்ணிக்கை 5 கோடியே 27 லட்சம் பேராக உயர்ந்துள்ள வேளையில் அதற்கு முந்தைய ஆண்டான 2021இல் இந்த எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 20ஆயிரம் பேராக மட்டுமே இருந்தாக மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

மாநிலங்களுக்கிடையிலான பயணத் தடை கடந்தாண்டு அக்டோபர் 11ஆம் தேதி மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்தாண்டு உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டு 3 கோடியே 62 லட்சம் பேராக உயர்ந்தது என அது தெரிவித்தது.

பதினேழு விமான நிறுவனங்கள் 32 நகரங்களுக்கான சேவையை மறுபடியும் தொடக்கியதைத் தொடர்ந்து அனைத்துலகப் பயணிகள் எண்ணிக்கை 1 கோடியே 65 லட்சம் பேராக அதிகரிப்பைக் கண்டது.

தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, வியட்னாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான விமான சேவை உயர்வைக் கண்டது என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

இது தவிர, 27 விமான நிறுவனங்கள் 38 நகரங்களுக்கான புதிய சேவையை அறிமுகப்படுத்தியதன் வாயிலாகவும் வருடாந்திர அடிப்படையிலான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Pengarang :