MEDIA STATEMENT

சிறைச்சாலையில் போதைப் பொருளை விநியோகம்-  சிறை வார்டனுக்கு  தூக்குத் தண்டனை

ஷா ஆலம், பிப் 1- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை வளாகத்திலேயே போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக சிறை வார்டன் ஒருவருக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம் நேற்று தூக்குத் தண்டனை விதித்தது.

குற்றசாட்டிற்கு எதிரான நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து முகமது எல்மி அரிஃப் ஹமிட் (வயது 40) என்ற அந்த வார்டனுக்கு  நீதிபதி நுருள்ஹூடா முகமது நோர் இந்த தண்டனையை வழங்கினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு 18ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சுங்கை பூலோவிலுள்ள சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்தில் 410.07 கிராம் எடையுள்ள கஞ்சா மெத்தம்பெத்தமின் போதைப் பொருளைக் கடத்தியதாக முகமது எல்மி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் 39பி() பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், ஹெரோயின் (4.25 கிராம்), மோனோசிந்தெல்மோர்பின்(1கிராம்), எல்திஸோலம் (38.67 கிராம்), க்ளோஸிப்செப்பின் (50.80 கிராம்) ஆகிய போதைப் பொருள்களை அதே இடத்தில் அதே நேரத்தில் வைத்திருந்ததாக மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் ஒன்பது சாட்சிகளும் எதிர்த்தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உள்பட மூன்று சாட்சிகளும் ஆஜராகினர்.

அரசுத் தரப்பில் துணை  பப்ளிக் புரோசிகியூட்டர்  ஷாருள் ஏக்சான் ஹஷிம் வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப் பட்டவர் சார்பில் ஜாம்ரி மாட் நவாங் ஆஜரானார்.


Pengarang :