ALAM SEKITAR & CUACAECONOMY

பத்துமலைத் திருத்தலத்தில் 300,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர்- காவல் துறை கணிப்பு

கோலாலம்பூர், பிப் 4- இன்று மாலை தொடங்கி நாளை வரை நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் போது பத்துமலை திருத்தலத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர் என காவல்  துறையினர் கணித்துள்ளனர்.

இன்று மாலை வெள்ளி இரதம் ஆலயம் வந்தடையும் போது பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தேவஸ்தான நிர்வாகத்தினர் தங்களிடம் தெரிவித்துள்ளதாக சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ  எஸ். சசிகலா தேவி கூறினார்.

நேற்று முதல் பக்தர்கள் பத்துமலைத் திருத்தலத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். தைப்பூச தினமான நாளை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது போக்குவரத்து நெரிசல் தவிர்த்து பத்துமலைத் திருத்தலத்தில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு 1,888 போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரத ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டாம் என பொது மக்களை அவர்  கேட்டுக் கொண்டார்.

பத்துமலைத் திருத்தலத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு தற்போது குற்றப்பதிவுகள்  மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :