MEDIA STATEMENTNATIONAL

எதிர்க்கட்சி மாநிலங்கள் மாற்றந்தாய் பிள்ளைகளா? அன்வார் மறுப்பு

அலோர் ஸ்டார், ஏப் 29- எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களை ஒற்றுமை அரசு மாற்றாந் தாய் பிள்ளைகள் போல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

பெரிக்கத்தான் நேஷனல் வசமிருக்கும் கெடா உள்பட அனைத்து எதிர்க்கட்சி மாநிலங்களுக்கும் மத்திய அரசு மானியத்தை அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.

ஜோகூர் மாநிலத்திற்கு மானியத்தை உயர்த்தியுள்ளோம். கெடாவுக்கும் மானியத்தை உயர்த்தியுள்ளோம். எதிர்க்கட்சி மாநிலங்களை அன்வார் மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் நடத்துவதாக சிலர் கூறுகின்றனர். அது அவதூறானப் பேச்சு. நீங்கள் அனைவரும் இதனைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று அவர் பொது மக்களிடம் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

அவதூறு என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அடித்தால் வலி எப்படி இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். லாக்கப்பில் அனுபவிக்கும் துன்பத்தின் வலி எனக்குத் தெரியும். நான் பிரதமராக ஆனவுடன் மக்களுக்கு கொடுமைகள் இழைத்தால் அது பொருளற்றதாகி விடும் என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற கெடா மாநில நிலையிலான மடாணி பேரணி நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற முறையில் தாம் யாருடனும் பகைமைப் பாராட்ட விரும்பவில்லை என்றும் மாறாக, உயர்நெறியை காக்க  விரும்பும் மலேசியர்களுடன் இணைந்து நாட்டை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி தோல்வியை ஒரு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு தீர்மானித்து விடப் போவதில்லை. வாக்குக்காக விருந்து வைப்பது எங்கள் நோக்கம் அல்ல. அந்த நோக்கத்திற்காக நீங்கள் என்னை ஆதரிப்பதையும் நான் விரும்பவில்லை என்றார் அவர்.


Pengarang :