ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

புயல்காற்றில் 50 வீடுகள் பாதிப்பு, மரம் விழுந்து மூன்று கார்கள் சேதம்- ஜோகூர் பாருவில் சம்பவம்

ஜோகூர் பாரு, மே 4- இங்குள்ள கம்போங் மிலாயு மஜிடியில் நேற்று வீசிய புயல்காற்றில ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 

இந்த சம்பவத்தில் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக நிவாரண மையம் கம்போங் மிலாயு மஜிடி மண்டபத்தில் திறக்கப்படுவதாக லார்க்கின் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஹைரி மாட் ஷா கூறினார்.

மக்கள் குடியிருக்க முடியாத அளவுக்கு பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வீடுகளில் கூரைகள் முற்றிலும் பெயர்ந்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஏதுவாக நிவாரண மையத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த பேரிடர் தொடர்பில் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹாபிஷ் காஸியிடம் தகவல் தெரிவித்துள்ளேன். அவரும் விரைவில் நல்ல பதிலைத் தருவதாக தெரிவித்துள்ளார் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் சேத மதிப்பையும் ஆராயும் பணியில் தாங்கள் இப்போது ஈடுபட்டு வருவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை 2.48 மணியளவில் வீசிய இந்த புயல்காற்றில் மரங்கள் விழுந்து மூன்று கார்களும் சேதமடைந்ததாக ஜேகூர் பாரு மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.


Pengarang :