ECONOMYMEDIA STATEMENT

விதிமுறைகளை மீறும் வணிகர்களின் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்- எம்.பி.எஸ்.ஏ. எச்சரிக்கை

ஷா ஆலம், மே 4- நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் பட்சத்தில் வர்த்தகப் பொருள்கள் பறிமுதல் மற்றும் லைசென்ஸ் முடக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்று இங்குள்ள பிளாசா ஸ்ரீ மூடா மார்க்கெட் வணிகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தையில் வர்த்தகம் புரிவோர்  விதிமுறைகளை மீறிச் செயல்படுவது தொடர்பில் செய்யப்படும் புகார்களை தாங்கள் கடுமையாகக் கருதுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

லைசென்ஸ் இன்றி செயல்படுவது, அந்நிய நாட்டினரை வேலைக்கு அமர்த்துவது, அந்நிய நாட்டினரை வியாபாரம் செய்ய அனுமதிப்பது, கோழி மற்றும் வாத்துகளை பொது இடங்களில் அறுப்பது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் தாங்கள் பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

பிளாசா ஸ்ரீ மூடா சந்தை தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டாலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அங்குள்ள வர்த்தகர்கள் கடைபிடிப்பது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்தையில் விதிமீறல்கள் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய நாங்கள் மாநகர் மன்ற அமலாக்கப் பிரிவின் அடிக்கடி சோதனை மேற்கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் மற்றும் மாநகர் மன்றத்தின் லைசென்ஸ் பிரிவு இயக்குநர் மாடியான் பாவே ஆகியோர் அந்த சந்தைக்கு வருகை புரிந்து நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர்.

அந்நிய நாட்டினரின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பொது மக்கள் முன்வைத்த புகாரின் பேரில் இந்த சோதனையை அவர்கள் மேற்கொண்டனர்.

விதிகளை மீறும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர் மன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான புகார்களை பொது மக்கள் 1800-88-4477 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக மாநகர் மன்றத்திடம் தெரிவிக்கலாம்.


Pengarang :