MEDIA STATEMENT

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 62,132 பேர் கைது- வெ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஷா ஆலம், மே 4- இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதைப் பொருள் மற்றும் விஷப் பொருள் தொடர்பான .குற்றங்களுக்கு 62,132 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கைதான அனைவர் மீதும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம், 1952 ஆம் ஆண்டு விஷ சட்டம் மற்றும் 1983 ஆம் ஆண்டு போதைப்பித்தர் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கைகளில் 7,017 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருள் மற்றும் 1,379 லிட்டர் திரவ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர, 31,856 கிலோ கெத்தும் இலைகள், 21,243 லிட்டர் கெத்தும் பானம் மற்றும் கஞ்சா செடிகளும் இக்காலக்கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு 21 கோடியே 30 லட்சம் வெள்ளியாகும்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக பல போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப் பட்டதாக அரச மலேசிய போலீஸ் படை தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இக்கும்பல்களின் உறுப்பினர்களுக்கு சொந்தமான 3 கோடியே 28 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதோடு 27 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இச்சோதனைகளில் 366 உறுப்பினர்களை உள்ளடக்கிய 118 போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் கைது செய்யப்பட்டு நான்கு போதைப்பொருள் பதனீட்டுக் கூடங்களும் அழிக்கப்பட்டன.


Pengarang :