ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 18,000 இல்லத்தரசிகளைப் பதிவு செய்ய சிலாங்கூர் சொக்சோ திட்டம்

கிள்ளான், மே 5- இவ்வாண்டு இறுதிக்குள் சிலாங்கூரில் 18,000 பெண்களை இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் முதல் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுமார் 6,000 மகளிர் பதிவு செய்துள்ளதாக சொக்சோவின் சிலாங்கூர் மாநில இயக்குனர் இஸ்மாயில் அபி ஹஷிம் கூறினார்.

இந்த திட்டத்தில் மேலும் அதிகமான பெண்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக சமூகத் தலைவர்களைச் சந்திக்கும் முயற்சியில் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது மிகவும் சிறப்பான பாதுகாப்பு திட்டமாகும். வீடுகளில் வேலைகளை கவனிக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இந்த திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ் நிரந்தர உடல் செயலிழப்பு , மருத்துவம், மறுவாழ்வு, முதுமைக்கான உதவி, டயாசிலிஸ், நல்லடக்கச் சடங்கு உள்ளிட்ட உதவிகள் வழங்கப் படுகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

பணிக்குச் செல்லும் அல்லது பணிக்குச் செல்லாத 55 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் 12 மாதங்களுக்கான சந்தா தொகையான 120 வெள்ளியை தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும்.


Pengarang :