ALAM SEKITAR & CUACASELANGOR

எல் நினோ- சிலாங்கூரிலுள்ள நீர்த் தேக்கங்கள் ஆறு மாதம் வரை தாக்குப் பிடிக்கும்- மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, மே 13– தற்போது நிலவி வரும் வெப்பம் மற்றும் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் எல் நினோ பருவநிலை மாற்றத்திற்கு மத்தியிலும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நீர்த் தேக்கங்கள் ஆறு மாதம் வரை தாக்குப் பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

மாநிலத்திலுள்ள அனைத்து நீர்த் தேக்கங்கள் மற்றும் நீர் சேகரிப்புக் குளங்களில் பதிவாகியுள்ள மொத்த நீர் கொள்ளளவின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் தற்போதைய நீரின் அளவு குறித்து நேற்றுதான் நான் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்திடம் (லுவாஸ்) கேட்டறிந்தேன். நீர்த் தேக்கங்களை நாங்கள் தொடர்ந்தாற்போல் கண்காணித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள செக்சன் ஒன்றில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் சேவை மையத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களை லுவாஸ் அணுக்கமாக கண்காணித்து வருவதேடு நீரின் அளவில் மாற்றம் இருக்கும பட்சத்தில் அது குறித்து தகவல் தெரிவிக்கும் என்று அவர் சொன்னார்.

வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மழைப் பொழிவு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் இதன் மூலம் நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு வழக்க நிலைக்குத் திரும்பும். இருந்த போதிலும் கண்காணிப்புப் பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில் சிலாங்கூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு உட்படும் என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் கூறியுள்ளது.


Pengarang :