NATIONAL

“கேம் முஹிபா கித்தா சிலாங்கூர்“ வழி பல்லின இளையோர் மத்தியில் நட்புறவு வளர வாய்ப்பு

கோல லங்காட், மே 15- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான “கேம் முஹிபா
கித்தா சிலாங்கூர் 2023“ எனும் ஒற்றுமைத் திட்டம் ஒருமைப்பாட்டை
வளர்ப்பதற்கும் பிற இனங்கள் மீதான எதிர்மறையான கண்ணோட்டத்தைக்
களைவதற்கும் உதவியுள்ளது.

பல இனங்களைச் சேர்ந்த இளைஞர்களை நண்பர்களாகப் பெறுவதற்கு
இந்த திட்டம் வாய்ப்பினை வழங்கியதாக இந்நிகழ்வில் ஆண்கள் பிரிவின்
சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஊஸாய்ர் டேனிஷ்
ஜைனால் (வயது 16) கூறினார்.

சிறுவயது முதல் எனக்கு இந்திய நண்பர்கள் என்று யாரும் கிடையாது.
இந்த முகாமில் கலந்து கொண்டப் பின்னர் எனக்கு புதிய நண்பர்
கிடைத்துள்ளார். சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதைப்
போலவே மற்றவர்களுடன் பழகுவதையும் உணர்கிறேன். மதம் மட்டும்தன்
மாறுபட்டுள்ளது என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை நாம் முழுமையாக நம்பி
விட முடியாது. அவர்களுடன் பழகிப் பார்க்கும் போதுதான் மற்ற
இனத்தினரைப் பற்றி வெளியிடப்படும் எதிர்மறையான செய்திகளில்
உண்மை இல்லை என்பது தெரியவருகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கேம்
முஹிபா கித்தா சிலாங்கூர் 2023 பயிற்சி முகாம் நிறைவு விழாவின்
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த முகாமின் நிறைவு விழாவுக்கு ஊராட்சி துறைக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமை தாங்கினார்.

இந்த மூன்று நாள் முகாமில் பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களைச்
சேர்ந்த 70 மாணவர்கள் பங்கு கொண்டனர். இந்த முகாமின் சிறந்த மகளிர்
பங்கேற்பாளராகச் சங்கரி முனியாண்டி (வயது 22) தேர்வு பெற்றார்.

பல இனங்களைச் சேர்ந்த மற்றும் இதர கல்விக் கூடங்களைச் சேர்ந்த
மாணவர்கள் மத்தியில் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த
முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Pengarang :