MEDIA STATEMENTNATIONAL

மலைச்சாரல் பராமரிப்பு தொடர்பான கலந்துரையாடலில் 100 குடியிருப்பாளர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், ஆக 21– அம்பாங், தாமான் புக்கிட் மூலியாவிலுள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலைச்சாரல் பராமரிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுமார் 100 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

காலை 9.30 மணி தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் இக்ராம் எனப்படும் மலேசிய பொதுப்பணி கழகத்தின் ஆதரவுடன் சுலோப்வாட்ச் என்ற அரசு சாரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பில் உள்ள மலைச்சாரல்களை பராமரிப்பது தொடர்பில் நகராண்மைக் கழகத்தின் பொறியியல் துறை இயக்குநர் இஞ்சினியர் ஸப்ருள் ஃபாஸ்ரி பவிஸ வழங்கிய வேளையில் இக்ராம் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோ முகமது தவுபிக் ஹருண் மலைச்சாரல் பராமரிப்பில் தனக்கு உள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கேள்வி-பதில் அங்கம் நிகழ்வுக்கு நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது தலைமை தாங்கினார். மலைச்சாரல் மற்றும் உயர் நிலம் தொடர்பாக பொது மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வட்டாரத் தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பதிலளித்தனர்.

இந்த நிகழ்வில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்ற உறுப்பினர் கம்ரி கமாருடின்,  லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அல்டிமேட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :