MEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோத பந்தயம்- போலீஸ் அதிரடியில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல், 230 பேருக்கு சம்மன்

ஜார்ஜ் டவுன், ஆக 21 – பினாங்கு மாநிலத்தில் சட்டவிரோத பந்தயக்காரர்கள் அதிகம் கூடும் பகுதிகளில்  பினாங்கு போலீசார் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டன.

பினாங்கு போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இந்த  நடவடிக்கையானது பினாங்கு தீவின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு

மாவட்டங்களில் உள்ள சட்டவிரோத பந்தய மையங்களில் பெரு நிலத்தில் உள்ள  செபராங் பிறை வடக்கு மற்றும் மத்திய செபராங் பிறை மாவட்டங்களிலும்  மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏழு அதிகாரிகள் மற்றும் 64 போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை உறுப்பினர்கள் ஈடுபடுத்தப் பட்டதாக பினாங்கு காவல்துறை முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 64(1) இன் கீழ் 50 மோட்டார் சைக்கிள்களைக்  கைப்பற்றிய போலீசார், சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட அல்லது ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக நான்கு பேரைக் கைது செய்தனர். இதன் தொடர்பில் சட்டப் பிரிவு 42 (1) இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

போலி வாகன பதிவு எண்கள் தொடர்பில் அதே சட்டத்தின் பிரிவு 108 இன் கீழ் ஒரு நபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 230 சம்மன்கள் வழங்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :