ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நேர்ந்த துயரம்- இளைஞர், முதியவர் நீரில் மூழ்கி மரணம்

சிரம்பான், ஆக 21- இங்குள்ள  ஜாலான் ரந்தாவ், லாடாங் கொம்போக்கில் உள்ள சுங்கை சிமெனில்  நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர்  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் பலியானவர்கள் லாடாங் கொம்போக்கைச் சேர்ந்த 16 வயது இளைஞர்   மற்றும் தாமான் புக்கிட் மெர்போக் ரியா என்ற முகவரியைச் சேர்ந்த  60 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரந்தாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை  தீயணைப்பு அதிகாரி 1 முகமட் சியாஸ்வான் சைடி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 8.07 மணிக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ரந்தாவ் தீயணைப்பு நிலையத்தின் பத்து உறுப்பினர்கள்  நீர் மீட்புக் குழுவின்  10 உறுப்பினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக  அவர் கூறினார்.

இளைஞரின் உடலை அவரது 20 வயதுடைய சகோதரர் இரவு 7.15 மணியளவில் கண்டு பிடித்தார். தன் தம்பி மாலையில் இருந்து வீடு திரும்பாததால் அவரை ஆற்றங்கரையில் தேடும் முயற்சியில் அந்த சகோதரர் ஈடுபட்டதாக முகமது சியாஸ்வான் குறிப்பிட்டார் .

சம்பந்தப்பட்ட இருவரின் உடைமைகள் மட்டுமே ஆற்றின் அருகே இருப்பதை அவரது சகோதரர் கண்டார். அவர் தனது தம்பியை தொலைபேசி வழி அழைக்க  முயன்றார். ஆற்றின் கரையில் தொலைபேசி ஒலிப்பதைக் கேட்ட அவர், அந்த இடத்தை நெருங்கிய போது  தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு வலையைப் பார்த்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அச்சகோதரர் வலையை இழுத்தபோது அதில் தன் தம்பி சிக்கியுள்ளதைக் கண்டார் அவரை மீட்க முற்பட்ட போது   அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது முகமது சியாஸ்வான் கூறினார்.

இரவு 11.00 மணியளவில் கரையிலிருந்து 10 மீட்டர் தொலைவில் ஆற்றின் அடிப்பகுதியில் முதியவரின் சடலத்தை நீர் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இருவரின் உடல்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது பிரேதப் பரிசோதனைக்காக சிரம்பான்  துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :