ECONOMYMEDIA STATEMENT

பெலாங்கை இடைத்தேர்தல்- 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் பாரிசான் வெற்றி

பெந்தோங், அக் 8- நேற்று நடைபெற்ற பகாங் மாநிலத்தின் பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிஸார் அபு ஆடாம் 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பெந்தோங் அம்னோ தொகுதி செயல்குழுத் தலைவரான அமிஸாருக்கு 7,324 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமாட் 4,375 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் ஹாஸ்லிலெல்மி ஜூஹாஸ்னி 47 வாக்குகளையும் பெற்றனர்.

இத்தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் அதிகாரி முகமது சாஹிட் இஸ்மாயில் இங்குள்ள பெல்டா கெமாசுல் சமூக மண்டபத்தின்  வாக்கு எண்ணும் மையத்தில் நேற்றிரவு அறிவித்தார்.

இந்த தேர்தலில் 72.12 விழுக்காட்டு பதிவு பெற்ற வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தொகுதியில் 36 போலீஸ்காரர்கள் உள்பட 16,456 பதிவு வெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் மூவர் வெளிநாடுகளில் உள்ளதால் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பெலாங்கை தொகுதி உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.


Pengarang :