ECONOMYMEDIA STATEMENTPBT

நவம்பர் 30 வரை வெ.10 கோடி மதிப்பீட்டு வரியை எம்.பி.எஸ். வசூலித்தது

கோம்பாக், டிச 21- இவ்வாண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை தற்போதைய மதிப்பீட்டு வரியில் மொத்தம் 10 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை  செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது.

இவ்வாண்டிற்கான  வரி வசூலிப்பு இலக்கான 11 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியில் இது  87.43 விழுக்காடாகும் என்று நகராண்மைக் கழகத் தலைவர்  டத்தோ முகமது யாசிட் சாய்ரி கூறினார்.

மொத்த மதிப்பீட்டு வரி பாக்கி 1 கோடியே 30 லட்சம் வெள்ளியாக இருக்கும் நிலையில் அதில்  89 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி அல்லது 74.67 சதவிகிதம்  இக்காலக் கட்டத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்டது என்று அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற நகராண்மைக் கழகக் கூட்டத்தில் உரையாற்றிய முகமட் யாசிட்,  மைஎம்பிஎஸ், லஸாடா, ஷோப்பி, மற்றும் செப்பாட் இணைய சேவைகள் மூலம்   வரி செலுத்தும் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வரை மதிப்பீட்டு வரி செலுத்தத் தவறிய சொத்து உரிமையாளர்களுக்கு  31,303 வாரண்ட்களை நகராண்மைக் கழகம்  வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

200 வெள்ளி  அல்லது அதற்கு மேற்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்ட   உரிமையாளர்களுக்கு வாரண்ட் அனுப்பப்படும்.  வாரண்ட் ஒப்படைக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் வரியைச் செலுத்தாவிட்டால்  சொத்துகள் முழுமையாக  பறிமுதல் செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :