ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை- விளைவுகளை கிள்ளான் துறைமுகம், வெஸ்ட்போர்ட் மதிப்பீடு செய்யும்

கோலாலம்பூர், டிச 21 –  இஸ்ரேலிய சரக்குக் கப்பல் நடத்துநரான  ஜிம் இன்டகிரேட்டட் ஷிப்பிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கப்பல்களை கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஏற்படும்  விளைவுகளை   போர்ட் கிள்ளான் துறைமுக  ஆணையம் மற்றும் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெய்ஹாட் ஆகியவை மதிப்பீடு செய்யும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இட்ட உத்தரவுக்குப் பிறகு இந்த தடை அமலுக்கு  வந்துள்ளது.

துறைமுகத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பு குறித்து தாங்கள்  ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து கூடிய விரைவில் ஊடகங்களுக்கு அறிவிப்பதாகவும்   போர்ட் கிள்ளான் துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி கே. சுப்ரமணியன் தெரிவித்தார்.

இஸ்ரேலியக் கொடியுடன் வரும்  கப்பல்கள் நாட்டின் துறைமுகங்களில்  நிற்க மலேசியா அனுமதிக்காது என்பதோடு   இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தக் கப்பலும் மலேசியத் துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்வதை உடனடியாகத் தடைசெய்யும் என்றும்  பிரதமர் அறிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த முடிவு நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்காது எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி போர்ட் கிள்ளான் துறைமுகம்  வரவிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று திருப்பி அனுப்பப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இந்த தடையினால் பாதிக்கப்பட்ட சரக்குகளை கையாள்வதில்  இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு பட்டுவாடா தரப்பினருக்கு உதவும்படி   போர்ட் கிள்ளான் துறைமுக  ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லோக் கூறினார்.


Pengarang :