ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இலவச குடிநீர்த் திட்டத்தில் தொகுதி மக்களை பதிவு செய்ய புக்கிட் அந்தாராபங்சா உறுப்பினர் உதவி

ஷா ஆலம், டிச 22- மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தில் பொது மக்களை பதிவு செய்வதற்காக புக்கிட் அந்தாராபங்சா தொகுதி சேவை மையம் கடந்த மூன்று வாரங்களாக தொகுதியிலுள்ள பொது சந்தைகளில் முகப்பிடங்களை அமைத்துள்ளது.

மாதம் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்கும் டாருள் ஏஹ்சான் இலவச குடிநீர் திட்டத்தில் மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினர் பங்கு பெறுவதை உறுதி செய்வதற்காக தாங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் களப்பணியாற்றி வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கம்ரி கமாருடின் கூறினார்.

இந்த திட்டத்திற்கு வருமான வரம்பு உயர்த்தப்பட்டது உள்ளிட்ட விஷயங்களை பொது மக்கள் இன்னும் அறியாமலிருப்பதை கருத்தில் கொண்டு அத்தகைய தரப்பினரை அடையாளம் கண்டு அவர்களை இத்திட்டத்தில் சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

வார இறுதி நாட்களில் சந்தைகளுக்கு வரும் பொது மக்களை இந்த திட்டத்தில் பதிவு செய்யும் பணியில் தொகுதி சேவை மைய தன்னார்வலர்கள்  பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிர்வாகத்தினரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் எத்தனை குடும்பங்களைப் பதிவு செய்வது என்று நாங்கள் இலக்கு நிர்ணயிக்கவில்லை. எனினும், மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை பிரபலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தில் மேலும் 100,000 பேர் பயன் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார். இந்த இலவச குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசு 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் அதிகமானோர் பங்கு பெறுவதற்கு ஏதுவாக விண்ணப்பதாரர்களின்  குடும்ப வருமான வரம்பை மாநில அரசு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தியுள்ளது.


Pengarang :