ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பரிசாக வழங்க நீதிபதியின் கார் சின்னத்தை திருடினர்- இரு சகோதரர்கள் கைத

கோலாலம்பூர், ஜன. 12- தனது மூத்த  சகோதரனிடம் அன்பளிப்பாக  வழங்குவதற்காக கூட்டசு நீதிமன்ற நீதிபதியின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் இருந்த ‘நீதிபதி’ சின்னத்தை சேதப்படுத்திய பதின்ம வயது சிறுவனின் செயல் அவனுக்கே வினையாக முடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகோதரர்கள்  இருவரையும் கடந்த திங்கட்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இங்குள்ள தாமான் கோப்பராசி போலீஸ்  என்ற இடத்தில் சாலையோரம் கார் நிறுத்தப்பட்டிருந்த நீதிபதியின் கார்
கீறப்பட்டு எண்பட்டை மற்றும் நீதிபதியின் சின்னம் பெயர்த்தெடுக்கப்பட்டதைக்  கண்ட  நீதிபதியின் 30 வயது ஓட்டுநர் இது குறித்து போலீசில் புகார் அளித்ததாக செந்ததூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி கூறினார்.

சம்பவம் நடந்த இடத்திலுள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த 15 வயது சகோதரர்கள் இருவரும் காரை கற்களால் கீறியதோடு  காரிலிருந்த  நீதிபதியின் சின்னத்தை வேண்டுமென்றே உடைத்தது தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

அவ்விரு பதின்ம வயதினரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு  அருகிலுள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிய பிறகு வீட்டிற்கு திரும்பும் வழியில் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் கூறினர் என்றார் அவர்.

வரும் மார்ச் மாதம் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தனது சகோதரருக்கு  பரிசாக வழங்குவதற்காக அவர்களில் ஒருவர் ‘நீதிபதி’ சின்னத்தை பெயர்த்துச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட இருவரும் கடந்த திங்கட்கிழமை சிலாங்கூர்,  பத்து கேவ்சில்  உள்ள அவர்களது வீட்டில் கைது செய்யப்பட்டனர்.  வாக்குமூலம் எடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  அவர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்று அவர் இன்று செந்துல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். .

குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :